சுகுண விலாச சபா தல புராணம்

The rise of Suguna Vilas Sabha was linked to the dynamic laywer-turned-playwright Rao Bahadur Pammal Sambanda Mudaliar.

சுகுண விலாச சபா
தல புராணம்

அது 1891ம் வருடம். சென்ட்ரல் ரயில் நிலையம் அருகில் அப்போது புதிதாகத் திறக்கப்பட்ட விக்டோரியா பப்ளிக் ஹாலில் பெருங்கூட்டம்.  கார்களிலும், ஜட்கா வண்டிகளிலுமாக வந்திறங்கிய பெரிய மனிதர்களுடன், சாதாரண மக்களும் போட்டி போட்டுக்கொண்டு டிக்கெட்  எடுத்தபடி இருந்தனர். எதற்குத் தெரியுமா? ஆந்திராவிலுள்ள பெல்லாரியிலிருந்து (இன்று கர்நாடகாவில் உள்ளது இந்நகரம்) வந்த, ‘சரச  விநோதினி சபா’ என்ற நாடகக் குழு  தெலுங்கு மொழியில் அரங்கேற்றிய ‘சிரகாரி’ நாடகத்தைக் காண்பதற்காக! இதை நடத்தியவர் பெல்லாரி யில் வக்கீலாகப் பணியாற்றிய கிருஷ்ணமாச்சார்லு. இவரது நாடகக் குழுவில் இருந்த பலரும் அரசு  வேலையில் பணியாற்றி வந்தனர். அன்று நாடகம் என்றாலே கூத்து என்றும், அதைப் போடுபவர்களைக் கூத்தாடிகள் என்றும் மோசமாகவே  சித்தரித்தது சமூகம். ஆனால், இந்நாடகத்தைப் போட்டவர்கள் நன்கு படித்து அரசுப் பணியில் இருந்த மனிதர்கள். அதனாலேயே மொழி  புரியாவிட்டாலும் இதைப் பார்க்க வேண்டுமென பெரும் ஆவல் மெட்ராஸின் பெரிய மனிதர்களுக்கும் ஏற்பட்டது. இக்கூட்டத்தில்  நாடகத்தைக் காண தன் தந்தையுடன் அந்தப் பதினெட்டு வயது இளைஞ னும் சென்றிருந்தான். ஆயிரக்கணக்கான பேர் போய் பார்த்தாலும்  அந்த இளைஞனுக்கே தமிழிலும் இப்படியொரு நாடக சபையை உருவாக்க வேண்டுமெனும் எண்ணம் தோன்றியது. 

அந்த இளைஞன்தான் தமிழ் நாடகத் தந்தை எனப் போற்றப்படும் பம்மல் சம்பந்த முதலி யார்!அவர் எண்ணப்படி, 1891ம் வருடம் ஜூலை  முதல் நாள், ‘சுகுண விலாச சபா’ பிறந்தது. ‘‘மேற்கண்ட தேதியில் சபையை ஸ்தாபித்தவர் எழுவர். அவர்கள் ஸ்ரீமான்கள்  ஊ.முத்துகுமாரசாமி செட்டியார், வி.வெங்கடகிருஷ்ண நாயுடு, அ.வெங்கடகிருஷ்ண பிள்ளை, த.ஜெயராம் நாயக்கர், ஜி.இ.சம்பத்து  செட்டியார், சுப்பிரமணியப் பிள்ளை, நான்…’’ என தன் ‘நாடக மேடை நினைவுகள்’ நூலில் குறிப்பிடுகிறார் பம்மல் சம்பந்த முதலியார்.

முதன்முதலில் தம்புச் செட்டித் தெருவில் ஜெயராம் நாயக்கரின் வீட்டில்தான் இந்த எழுவரின் கூட்டம் நடந்தது. இதற்கு பம்மல் சம்பந்த  முதலியார் தலைமை வகித்தார். அப்போது இந்த எழுவரும் பள்ளிப் படிப்பை முடித்துவிட்டு கல்லூரிக்குள் நுழைந்திருந்த இளைஞர்கள்.  ‘சுகுண’ என்ற சொல் இருக்க வேண்டுமென ஊ.முத்து குமாரசாமி செட்டியாரும், ‘விலாச’ என்ற சொல்லை சம்பத்து செட்டியாரும் முன்  மொழிய, இரண்டையும் இணைத்து, ‘சுகுண விலாச சபா’ எனப் பெயர் சூட்டப்பட்டது.

இந்நேரம் சம்பந்த முதலியார் தமிழ் நாடகங்கள்தான் ஆடப்பட வேண்டுமென்ற கோரிக்கையை முன்வைக்க அனைவரும் அதை  ஆமோதித்தனர். ஆனால், எந்த நாடகத்தைப் போடுவது என்பதில் பெரும் குழப்பம். காரணம், அன்று ஆடப்பட்டு வந்த நாடகங்கள் பாடல்கள்  நிறைந்தும் வசனங்கள் குறைந்தும் இருந்ததால் எதுவும் சபா உறுப்பினர்களுக்குப் பிடிக்கவில்லை.இதனால், சில தமிழ் வித்துவான்களிடம்  நூதன தமிழ் நாடகம் எழுதித் தரும்படி உறுப்பினர்கள் கேட்டார்கள். சம்பந்த முதலியாரிடமும் இக்கோரிக்கை வைக்கப்பட்டது.  

அவர், ‘சிரகாரி’ நாடகத்தையே போடலாம் என்றெண்ணி அதைத் தெலுங்கிலிருந்து ஆங்கிலத்துக்கு மொழிபெயர்த்துத் தரும்படி மாநிலக்  கல்லூரியில் தன்னுடன் பயின்ற பால்ய நண்பரான ராமராயநிங்காரிடம் கேட்டார். அவரும்மொழி பெயர்த்துத் தந்தார். இந்த  ராமராயநிங்காரே பின்னால் மெட்ராஸ் மாகாண முதல்வராக இருந்த பனகல் ராஜா எனப் போற்றப்பட்டவர்! இவரே தி.நகரிலுள்ள பனகல்  பார்க்கை உருவாக்கியவர்!

இந்நேரம் பி.ஏ. தேர்வு வர, ‘சிரகாரி’ நாடகத்தை பம்மல் சம்பந்த முதலியார் தமிழில் மொழிபெயர்க்காமல் ‘சுகுண விலாச சபா’வின்  சட்டப்படி மூன்று மாதங்கள் படிக்கச் சென்றுவிட்டார். இதற்கிடையே அவரது தாயார் மாணிக்கவேல் அம்மாள் தவறிவிட மிகுந்த  துயரத்துக்கு ஆளானார். இதிலிருந்து மீள்வதற்கு, மீண்டும் சபா கூட்டத்தில் கலந்து கொண்டார். இந்நிலையில், சம்பந்த முதலியாருக்கு  அன்றைய நாடகத்தில் இருந்த பின்பாட்டும், வாத்திய இசையும் அறவே பிடிக்கவில்லை. இதைக் கொஞ்சம் கொஞ்சமாக சபா  உறுப்பினர்களுடன் கூறி மாற்றினார்.

இத்துடன், தமிழ் வித்துவான்கள் எழுதிக் கொடுத்த நாடகங்களும் மனதுக்கு ஏற்றதாக இல்லை. அதிலிருந்த குற்றங்களைச் சொன்னதும்,  ‘அப்போ நீயே எழுது…’ என அவர் நண்பர்கள் கூற, தானே எழுதத் தொடங்கினார். ஆனால், எப்படி எழுதுவது எனத் தெரியாமல் தவித்தார்.   இதைப் பார்த்த அவர் தந்தை பம்மல் விஜயரங்க முதலி யார், ‘நீ தமிழ் நாடகங்களைப் பார்த்திருக்கிறாயா?’ எனக் கேட்டார். ‘இல்லை’ என  சம்பந்த முதலியார் சொல்லவே, உடனடியாக அப்போது தமிழ் நாடகங்களைப் போட்டு வந்த கோவிந்தசாமி ராவ் என்பவரின், ‘ஸ்திரீ  சாகசம்’ என்ற நாடகத்துக்கு அழைத்துச் சென்றார்.நாடகக் கலையின் வளர்ச்சிக்கு வித்திட்ட இந்த கோவிந்தசாமி ராவ் ‘மனமோஹன நாடக  சபா’ என்ற நாடகக் குழுவை அன்று நடத்தி வந்தார். அன்று தமிழ் நாடகங்களை அரங்கேற்றி வந்த முக்கிய நாடக சபா இவருடையது.  இவரும் அரசுப் பணியிலிருந்து நாடகத்துக்காக தன் வேலையை ராஜினாமா செய்தவர்தான்!

இவரது நாடகத்தைக் கண்டுகளித்த சம்பந்த முதலியார், தனக்கு குறையென்று பட்ட சில விஷயங்களை மட்டும் நீக்கிவிட்டு அதே  நாடகத்தை ‘புஷ்பவல்லி’ என்ற பெயரில் எழுதினார்.படித்துப் பார்த்த நண்பர்கள் மகிழ்ந்து பயிற்சிக்குத் தயாராகி, ‘எந்த பாடல்களைத்  தாங்கள் பாட வேண்டும்…’ என்று கேட்க, சம்பந்த முதலியார் திகைத்தார். அக்காலத்தில் பாடல்கள் இல்லாமல் நாடகங்கள் இல்லை.  இதனால், பாடல்களைத் தாயுமான சுவாமி முதலியாரிடம் எழுதி வாங்கினார்.

அப்போது ஜார்ஜ் டவுனில் இருந்த விஜயநகரம் மகாராஜா உயர்நிலைப் பள்ளியில் பயிற்சி தொடங்கியது. இதில் கலந்து கொண்ட  உறுப்பினர்கள் தங்கள் பெற்றோருக்குத் தெரியாமலேயே வந்து சென்றார்கள். நாடகத்தைப் பற்றி இருந்த மோசமான எண்ணமே இதற்குக்  காரணம். மூன்று மாதப் பயிற்சிக்குப் பின் விக்டோரியா பப்ளிக் ஹாலில் நாடகத்தை அரங்கேற்ற முடிவு செய்தனர்.இருந்தும் அதற்குமுன்  இன்னொரு நாடகத்தையும் தயார் செய்துகொண்டு இரண்டு நாடகமாகப் போட முடிவெடுக்கப்பட்டது. இதனால், பம்மல் சம்பந்த முதலியார்  ‘சுந்தரி அல்லது மெய்க்காதல்’ என்ற நாடகத்தை எழுதி முடித்தார். இதை அவர் ேவறெந்த நாடகங்களையும் பார்க்காமல் சுயமாகவே  எழுதினார். 

நாடகங்கள் தயாராகிவிட்டன. மேடைக்குப் பின்னால் இருக்கும் திரைகளைத் தயார் செய்ய வேண்டும். அனைவருமே கல்லூரி மாணவர்கள்  என்பதால் யாரிடமும் பணமில்லை. எனவே புரவலர்களைத் தேடினர்.அப்போது ராமநாதபுரம் ராஜாவான பாஸ்கர சேதுபதி மெட்ராஸுக்கு  வந்திருந்தார். அவரிடம் பம்மல் சம்பந்த முதலியார் விஷயத்தைச் சொன்னதும் 300 ரூபாய் நன்கொடையாகக் கிடைத்தது. இதனைக்  கொண்டு ஏழு திரைகளை உருவாக்கினர். 

இப்போது கதாபாத்திரங்களுக்கு ஆடைகள் தேவை. என்ன செய்வது? அப்போது தஞ்சாவூர் அரண்மனையைச் சேர்ந்த பிரின்ஸ் பாட்சாராம்  சாயப் என்பவர் எதேச்சையாக வர, அவரிடம் முத்துகுமாரசாமி செட்டியார் பேசினார். அவர், 200 ரூபாய் நன்கொடை அளித்தார். துணிகள்  தைக்கப்பட்டன.பிறகு பெரிய மனிதர்களின் ஆதரவைப் பெற, அப்போது மெட்ராஸில் பல்வேறு தர்ம காரியங்களைச் செய்துவந்த ராஜா சர்  சவலை ராமசாமி முதலியாரைப் பார்த்துப் பேசி அவரை சபாவின் தலைவராக நியமித்தனர். மிகச்சிறந்த அறிஞராக விளங்கிய ராவ்பகதூர்  ரங்கநாத முதலியாரை துணைத் தலைவராக இருக்கும்படி கேட்டுக் கொண்டனர். இவர்களின் பெயர்களை அச்சிட்டு பிரசுரமும்  வெளியிட்டனர்.

‘‘இதற்குக் காரணம், நாடகமாடுவதை ஓர் இழிதொழிலாக மற்றவர்கள் எண்ணக்கூடாது என்பதை வலியுறுத்தத்தான்…’’ என விளக்கம்  தருகிறார் பம்மல் சம்பந்த முதலியார். விக்டோரியா ஹாலில் ஓர் இரவு நாடகம் போட ரூ.50 செலுத்த வேண்டும். முதல் நாடகத்துக்கான  கட்டணத்தை தலைவர் சவலை ராமசாமி முதலியாரிடமிருந்தும், இரண்டாவது நாடகத்துக்கான கட்டணத்தை புதுச்சேரியைச் சேர்ந்த  லட்சுமணசாமி செட்டியாரிடமும் பெற்றனர். சுமார் 25 ஆயிரம் ேநாட்டீஸ்கள் அச்சிட்டு குதிரையில் ஒருவரை அனுப்பி தெருத் தெருவாக  விநியோகித்தனர். இப்படி யாக இரண்டு நாடகங்களும் 1893ம் வருடம் மார்ச் மாதம் அரங்கேறின.பெரிய வெற்றி என்று சொல்ல  முடியாவிட்டாலும் மக்கள் போற்றும்வண்ணம் நாடகங்கள் அமைந்தன. ‘சுகுண விலாச சபா’வுக்கும் நல்ல பெயர் கிடைத்தது. இரவு பத்து  மணிக்குத் தொடங்கி அதிகாலையில் நாடகங்கள் முடியும். 

இதை மாற்றி சீக்கிரமே நாடகங்களை முடித்தனர் ‘சுகுண விலாச சபா’வினர். அதேபோல், மங்களகரமாக நாடகங்கள் முடியும் என்ற  வழக்கத்தையும் மாற்றிய ெபருமை இந்த சபாவினரையே சேரும்!  தொடர்ந்து அடுத்தடுத்து நாடகங்கள் அரங்கேற்றப்பட்டன. இதில்,  ‘மனோகரா’ நாடகம் பெரிய திருப்புமுனை கொடுத்தது. இதுவே பின்னாளில் கலைஞர் வசனத்தில் சிவாஜி நடிக்க ‘மனோகரா’  திரைப்படமாகவும் மாறியது. போலவே சம்பந்த முதலியார் போட்ட ‘சபாபதி’யும் ‘வேதாள உலகமு’ம் திரைப்படங்களாக வெற்றி பெற்றன.  அத்துடன் இவரது நாடகங்கள் பல்வேறு சபாக்களால் மேடையேற்றப்பட்டன. 

வளர்ந்தபிறகு 1902ம் வருடம் விக்டோரியா பப்ளிக் ஹாலின் மேற்குப் பக்கத்தில் ஓர் அறையை வாடகைக்கு எடுத்து சபாவை நடத்தினர்.  ஷேக்ஸ்பியரின், ‘The Merchant of Venice’ஐ ‘வாணிப்புரத்து வணிகன்’ என்றும்; ‘Hamlet’ஐ ‘அமலாதித்யன்’ என்றும் மொழிபெயர்த்து  நாடகங்கள் போடப்பட்டன.எட்டு வருடங்கள் கழித்து விக்டோரியா ஹாலின் கீழ்ப்பகுதி காலியாக, அதை மாதம் ரூ.150க்கு வாடகைக்கு  எடுத்து அங்கேயே பயிற்சி எடுத்து நாடகங்களைப் போட ஆரம்பித்தனர். இதற்குள் சபா, ஒரு சமூக சங்கமாக – சோஷியல் கிளப்பாக –  வளர்ந்திருந்தது.உறுப்பினர்களின் புத்துணர்ச்சிக்காக பில்லியர்ட்ஸ், டென்னிஸ் உள்ளிட்ட விளையாட்டுகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டன.  இப்படி புத்துணர்ச்சிக்காக ‘சுகுண விலாச சபா’ தொடங்கும் காலத்தில் இருந்தே பம்மல் சம்பந்த முதலியார் செய்து வந்துள்ளார். நாடகம்  முடிந்த மறுநாள் சந்தோஷக் கொண்டாட்டமாக ஒரு பிக்னிக் செல்வதை வழக்கப்படுத்தினார்.  

1908ம் வருடம் நாடகம் சம்பந்தமான நூல்கள் அடங்கிய ஒரு சிறிய நூலகமும் விக்டோரியா ஹாலில் அமைக்கப்பட்டது. முன்னணி  பத்திரிகைகள் எல்லாம் வாங்கப்பட்டு வாசிப்பை ஊக்குவித்தனர். உறுப்பினர்கள் அதிகளவில் சேர, மக்கள் கூட்டமும் அதிகரிக்க,  விக்டோரியா ஹாலில் இடம் போதவில்லை. எனவே, உறுப்பினர்கள் அனைவரும் புதிதாக ஒரு தியேட்டர் கட்ட வேண்டும் என ஒருமித்து  குரலெழுப்பி ஏகமனதாக இத்தீர்மானம் நிறைவேறி கட்டடத்துக்கான குழு அமைக்கப்பட்டது. இந்நேரம் அரசே நேப்பியர் பூங்காவை  (இன்றைய மே தினப் பூங்கா) குத்தகைக்குக் கொடுக்க ஒப்புக் கொண்டது. இதுவும் போதுமானதாக இருக்கவில்லை. 

இதனால், புதிதாகக் கட்டடம் கட்ட கொழும்பு, பெங்களூர் உள்ளிட்ட நிறைய இடங்களில் நாடகங்கள் நடத்தி நிதி திரட்டினார்கள். 1935ம்  வருடம் அன்றைய மவுண்ட் ரோட்டிலிருந்த சர் தியாகராய செட்டியாரின் கட்டடம் விலைக்கு வர அதை, ரூ.95 ஆயிரத்துக்கு வாங்கி  ‘சுகுண விலாச சபா’ அங்கே நிரந்தமாகக் குடியேறியது. தொடர்ந்து 1945ல் ஒரு தியேட்டர் கட்டப்பட்டது. அதற்கு நியூ தியேட்டர் எனப்  பெயரிடப்பட்டு பின்னர் இது ‘பிளாசா’ என்ற பெயரில் சினிமா தியேட்டரானது. தவிர, ஒரு திறந்தவெளி அரங்கும் நிர்மாணிக்கப்பட்டது. 

1974ல் பழைய கட்டடம் இடிக்கப்பட்டு அருகே கட்டப்பட்ட புதிய கட்டடத்துக்கு சபா மாறியது. ஒருகட்டத்தில் சினிமாக் கலை வளர,  நாடகக் கலை பொலிவிழந்தது. இந்நேரம் ‘சுகுண விலாச சபா’ நாடகத்திலிருந்து மெல்ல விலகி கிளப் செயல்பாடுகளில் கவனம்  செலுத்தியது. கிரிக்கெட், ஸ்நூக்கர், பில்லியர்ட்ஸ் போன்ற விளையாட்டுகளில் மாநில அளவில் பந்தயங்கள் நடத்தி வீரர்களை  ஊக்கப்படுத்தியது.ஆனால், தசரா, சபா உருவான தினம் உள்ளிட்ட சில முக்கிய தினங்களில் மட்டும் அமெச்சூர் குழுக்களால் நாடகங்கள்  போடப்பட்டு வந்தன. இது இன்றுவரை தொடர்ந்து வருகிறது.  இப்போது பரபரப்பான அண்ணாசாலையில் காஸ்மோ பாலிட்டன் கிளப்  அருகே 127 வருட காலத்தைக் கடந்து அமைதியாகச் செயலாற்றி வருகிறது இந்த ‘சுகுண விலாச சபா’!                                     

சம்பந்த முதலியார்

* 1873ம் வருடம் பிறந்த பம்மல் சம்பந்த முதலியார் 94 நாடகங்கள் எழுதியுள்ளார். இவரது தந்தை விஜயரங்க முதலியார், ஸ்கூல் ஆஃப்  இன்ஸ்பெக்டர் என்ற பள்ளி ஆய்வாளர் பணியில் இருந்தார். 

* வக்கீலாகப் பணியாற்றி சிறு வழக்குகளை விசாரிக்கும் நீதிமன்றத்தின் நீதிபதியாகவும் சம்பந்த முதலியார் இருந்தார். 

* நாடகங்களில் ‘மனோகரா’ மட்டும் சுகுண விலாச சபாவில் 1895 முறையும், மற்ற இடங்களில் 859 முறையும் நடிக்கப்பட்டது. 

* இவருடன் சர்.சி.பி.ராமஸ்வாமி அய்யர், காங்கிரஸ் தலைவர் எஸ்.சத்தியமூர்த்தி, பிரபல வக்கீலான வி.வி.சீனிவாச அய்யங்கார், இவரது  மருமகன் வி.சி.கோபால்ரத்னம், பிரபல நாடக ஆசிரியர் எம்.கந்தசாமி முதலியார், 1949ல் ‘அபூர்வ சகோதர்கள்’ படத்தை இயக்கிய  ஆச்சார்யா உள்ளிட்ட பல்வேறு முக்கிய பிரபலங்கள் நடித்துள்ளனர். 

* 1959ல் சங்கீத நாடக அகடமி விருதும், 1963ல் பத்மபூஷண் விருதும் பெற்றார். 

* 1964ம் வருடம் தன் 91வது வயதில் இயற்கை எய்தினார். 

This image has an empty alt attribute; its file name is 111.jpg


This image has an empty alt attribute; its file name is 888-1024x671.jpg
This image has an empty alt attribute; its file name is OMSR5312-copy-1024x683.jpg

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *