புரட்ச்சி தலைவி வாழ்க்கை குறிப்பு

வாழ்க்கை வரலாறு :: அம்மாவின் அரசியல் பாதை முட்களால் நிரம்பியது. எந்த ஒரு தலைவரையும் போலவே ஜெயலலிதாவும் சவால்களால் சூழப்பட்டவர்தான். ஆனால் அத்தனை சவால்களையும் ஜஸ்ட் லைக் தட் தகர்த்தெறிந்து தொடர்ந்து முன்னேறி வெற்றியை தனதாக்கிக் கொண்ட வித்தியாசத் தலைவர் ஜெயலலிதா என்பதில் யாருக்கும் சந்தேகம் இல்லை.
அரசியல் மாச்சரியங்களைக் கடந்து ஜெயலலிதாவை அனைவருக்கும் பிடிக்கக் காரணம் அந்த தைரியமும் தன்னம்பிக்கையும்தான். 1948ம் ஆண்டு பிப்ரவரி 24ம் தேதி மாண்டியா மாவட்டத்தில் ஜெயராம் – வேதவள்ளி தம்பதிக்கு மகளாகப் பிறந்தவர் ஜெயலலிதா.
திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் தனது பூர்வீக ஊர் என்று அடிக்கடி கூறுவார் ஜெயலலிதா. இவரது தாத்தாவின் குடும்பம், ஸ்ரீரங்கத்தில் இருந்து மேல்கோட்டைக்கு இடம் பெயர்ந்த குடும்பம் என்றும் கூறுகின்றனர். தந்தை ஜெயராமின் மறைவிற்குப் பின்னர் பெங்களூருவிற்கு இடம் மாறிய ஜெயலலிதாவின் குடும்பம், அவரது தாயாருக்கு கிடைத்த திரைப்பட வாய்ப்புகளால் சென்னையின் குடியேறியது.
வேதவல்லியாக இருந்த ஜெயலலிதாவின் தாயார் சினிமாவில் நடிப்பதற்காக சந்தியாவாக மாறினார். சென்னைக்கு வந்த பின்னர், சர்ச் பார்க் ப்ரேசெண்டேஷன் கான்வென்ட்டில் படித்த ஜெயலலிதா மெட்ரிக் தேறினார். ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரியில் புகுமுக வகுப்பில் படிக்க அனுமதி கிடைத்த நேரத்தில்தான் திரைப்படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. எனவே படிப்பை கைவிட்டு நடிகையானார்.

தமிழகத்தின் தவிர்க்க முடியாத சக்தி
சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகும் நடிகைகளின் அதிக பட்ச ஆசை, நிறைய திரைப்படங்களில் கதாநாயகியாக நடிக்க வேண்டும், பிரபல நாயகர்களின் ஜோடியாக நடித்து புகழ் பெற வேண்டும் என்பதாகத்தான் இருக்கும். ஆனால் பதினைந்து வயதில் திரை நட்சத்திரமாகத் தனது வாழ்வைத் துவங்கிய ஜெயலலிதா ஒருவர் மட்டுமே தமிழக வாழ்வில் ஒரு பெண் ஆளுமையாக திகழ்கிறார்.

#எம்ஜிஆர்_என்ற_சக்தி
1965ம் ஆண்டு வெண்ணிற ஆடை படத்தில் நடித்த போதோ புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர்., அந்த படத்தில் கதாநாயகியாக நடித்த ஜெயலலிதாவை தனது ஆயிரத்தில் ஒருவன் படத்தின் நாயகியாக நடிக்க வைத்தார். அப்போதே ஜெயலலிதாவின் பக்கம் அதிர்ஷ்ட காற்று வீச ஆரம்பித்து விட்டது என்றுதான் கூற வேண்டும். எம்.ஜி.ஆருடன் மட்டும் ஜெயலலிதா இருபத்தி எட்டு படங்களுக்கும் மேலாகக் கதாநாயகியாக நடித்தார்.

#அரசியல்_வாழ்க்கை
1981ம் ஆண்டு மதுரையில் ஐந்தாம் உலகத்தமிழ் மாநாடு நடைபெற்றது. அந்த மாநாட்டில் காவிரி தந்த கலைசெல்வி என்னும் நாட்டிய நாடகம் நடைபெறுவதாக இருந்தது. அந்த நாடகத்தில் நடிப்பதற்காக சினிமாவிலிருந்து ஒதுங்கியிருந்த ஜெயலலிதாவை அழைத்து வந்தார் ஆர்.எம்.வீரப்பன். அந்த வகையில் ஜெயாவின் அரசியல் பிரவேஷத்திற்கு வித்திட்டவர் ஆர்.எம்.வீரப்பன் என்றுதான் கூறவேண்டும்.

#பிரச்சார_பீரங்கி
அதிமுகவில் இணைந்து பிரச்சார பீரங்கியாக உருவெடுத்தார். அவரது வருகை, பல அதிமுக புள்ளிகளுக்கு வயிற்றில் புளியைக் கரைத்தது, எரிச்சலைக் கொடுத்தது. அவரை அடக்க முடியாமல் தவித்தனர். ஆனால் இந்த. எதிர்ப்புகளை தன்னை மேலும் பலப்படுத்திக் கொள்ளவும், நிரூபிக்கவும் ஜெயலலிதா பயன்படுத்திக் கொண்டார். அதிமுகவில் எம்.ஜி.ஆருக்கு அடுத்து தனி ஆதரவு வட்டம் ஒருவருக்கு அப்போதே இருந்தது என்றால் அது ஜெயலலிதாவுக்குத்தான்.

#கொள்கை_பரப்பு_செயலாளர்
1983ம் ஆண்டு அதிமுகவின் கொள்கை பரப்புச் செயலாளராக நியமிக்கப்பட்டார் ஜெயலலிதா. கட்சியில் ஏற்பட்ட புகைச்சலில் கட்சியின் கொள்கை பரப்பு செயலாளர் பொறுப்பில் இருந்து எம்.ஜி.ஆரால் விடுவிக்கப்பட்டார். 1984 சட்டசபைத் தேர்தலின்போது எம்.ஜிஆருக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்காக அமெரிக்க சென்றதால், ஜெயலலிதா,கிராமம் கிராமமாக பிரச்சாரம் செய்து அதிமுகவுக்கு ஆதரவு திரட்டினார் . அவரது பிரச்சாரத்திற்குப் பெரும் வரவேற்பு கிடைத்தது. அதிமுகவும் அமோக வெற்றி பெற்றது.

#அரசியல்_வாரிசு
1985 பிப்ரவரி 12ம் தேதி எம்.ஜி.ஆர் சென்னை திரும்பினார். ஜெயலலிதாவை மீண்டும் கொள்கை பரப்புச் செயலாளராக நியமித்தார் எம்.ஜி.ஆர். ஆக்கினார். 1986ம் ஆண்டு மதுரை தமுக்கம் மைதானத்தில் நடைபெற்ற அனைத்துலக எம்.ஜி.ஆர். ரசிகர் மன்ற மாநாட்டில் வெள்ளி செங்கோலை எம்.ஜி.ஆருக்கு வழங்கி ‘அரசியல் வாரிசு’தானே என்பதை அடையாளப்படுத்திக் கொண்டார். ஜெயலலிதாவுக்கு மிகவும் பிடித்த புகைப்படம் அதுதான்.

#எம்ஜிஆர் #மரணம் 
உடல்நிலையில் ஏற்பட்ட கோளாறினால் 1987 டிசம்பர் 24ம் தேதி எம்.ஜி.ஆர் மரணம் அடைந்தார். எம்.ஜி.ஆரின் உடலருகே இருந்த கண்ணீரோடு இருந்த ஜெயலலிதா எல்லோராலும் கவனிக்கப்பட்டார். எம்.ஜி.ஆரின் இறுதி ஊர்வல வேனில் ஏறியபோது கே.பி.ராமலிங்கத்தால் வலுக்கட்டாயமாக இழுத்து கீழே தள்ளப்பட்ட சம்பவமும் அப்போது நடந்தது. அதனால் அனுதாபமும் பெற்றார்.
பிளவுபட்ட கட்சி எம்.ஜி.ஆரின் மறைவுக்குப் பின், அஇரண்டாகப் பிரிந்தது. அடுத்த முதல்வர் யார் என்ற கேள்வி எழ, அ.தி.மு.க.வில் பதவிச் சண்டை உருவானது ஜெயலலிதா கோஷ்டி, ஆர்.எம்.வீ. கோஷ்டி என்று கட்சி 2 ஆக பிளவு பட்டது. முடிவில் எம்.ஜி.ஆரின் துணைவியார் ஜானகி அம்மாள் முதல்வர் பொறுப்பு ஏற்றார்

#எதிர்கட்சித்தலைவி
1989ம் ஆண்டு சட்டசபைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட ஜெயலலிதா, அதிரடியாக செயல்பட ஆரம்பித்தார். தமிழக சட்டசபையின் முதல் பெண் எதிர்க்கட்சித் தலைவர் ஜெயலலிதாதான். 27 எம்.எல்.ஏக்களை வைத்துக் கொண்டு திமுகவின் கண்களில் விரலை விட்டு ஆட்டினார். சட்டசபையில் எப்போதும் புயல்தான். 1989ம் ஆண்டு மார்ச் 25ம் தேதி சட்டசபையில் நடந்த வரலாறு காணாத வன்முறைச் சம்பவம் சட்டசபையின் வரலாற்றில் மிகப் பெரிய களங்கமாக அமைந்து போனது. தான் திமுகவினரால் தாக்கப்பட்டதாக கூறி பரபரப்பை ஏற்படுத்தினார் ஜெயலலிதா. கலைந்த தலையும், கிழிந்த சேலையுமாக அவர் வெளியே வந்து பேட்டி கொடுத்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

#முதல்வரான_ஜெயலலிதா 
1991ல் நடந்த சட்டசபைத் தேர்தலில் காங்கிரஸுடன் கூட்டணி வைத்து தேர்தலைச் சந்தித்தார் ஜெயலலிதா. தேரத்ல் பிரச்சாரத்தின்போது ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்டார். அதனால் ஏற்பட்ட அனுதாப அலையால் அதிமுகவுக்குப் பெரும் வெற்றி கிடைத்தது. முதல் முறையாக முதல்வர் பதவியல் அமர்ந்தார் ஜெயலிதா.

#சிறைவாழ்க்கை
1991 முதல் 1996 வரை அவர் ஆட்சி புரிந்த விதம் தமிழக வரலாற்றில் மறக்க முடியாத ஒன்று. அந்த காலகட்டத்தில்தான் அவர் மிகப் பெரிய அளவில் சொத்துக்குவிப்பில் ஈடுபட்டதாக பின்னாளில் வழக்குத் தொடரப்பட்டது. இந்த வழக்குதான் இவரை சிறைக்கும் அனுப்பி வைத்தது.

#மீண்டு_வந்த_ஜெயலலிதா 
1996ம் ஆண்டில் நடந்த தேர்தலில் ஆட்சியை பறிகொடுத்தார் ஜெயலலிதா. அதன் பின்னர் 2001ல் மீண்டும் ஆட்சியைப் பிடித்தார். அதை 2006ல் பறி கொடுத்தார். ஆனாலும் 2011ம் ஆண்டு நடந்த பொதுத் தேர்தலில் மிகப் பெரிய வெற்றியை பெற்றது அதிமுக. மீண்டும் முதல்வரானார் ஜெயலலிதா. இந்த நிலையில்தான் 2014ம் ஆண்டு சொத்துக் குவிப்பு வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டார் ஜெயலலிதா. தான் பிறந்த கர்நாடக மாநிலத்தில் உள்ள சிறையில் அவர் அடைக்கப்பட்டது அவரது வாழ்க்கையில் மறக்க முடியாத ஒன்று. 2015ம் ஆண்டு சிறை தண்டனையிலிருந்தும், சொத்துக் குவிப்பு வழக்கிலிருந்தும் மீண்டு வந்தார் ஜெயலலிதா.
2016 சட்டசபைத் தேர்தலில் புதிய வரலாறு படைத்து வெற்றி பெற்றுள்ளது அதிமுக. 1984ம் ஆண்டுக்குப் பிறகு மாறி மாறி திமுக, அதிமுக ஆட்சியைப் பிடித்து வந்த நிலையில் முதல் முறையாக அதிமுக ஆட்சியை தக்க வைத்தது. எம்.ஜி.ஆரின் வாரிசு என்பதை இதிலும் நிரூபித்தார்.
மருத்துவமனையில் இதனிடையே செப்டம்பர் மாதம் 22ம் தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஜெயலலிதா 75 நாட்களுக்குப் பின்னர்  காலமானதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழக அரசியல் வரலாற்றில் ஜெயலலிதா தவிர்க்க முடியாத சக்தி என்பதில் சந்தேகமில்லை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *